முன்னாள் காதலியை கடத்தி சென்ற இளைஞர் காருடன் கருகி பலியான சோகம்
கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து உயிரை விட நினைத்த காதலன் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து உயிரை விட நினைத்த நாகேந்திரா என்ற நபர், வாடகைக் கார் ஒன்றை பிடித்து அதில் வெடிகுண்டு பொருத்தி, EX காதலியை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். துமகுரு மாவட்டத்தில் உள்ள ஜோகிஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார் திடீரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. கார் தீப்பற்றியதால் கீழே குதித்த பெண் உயிர்தப்பினார். கார் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், 30 வயதான நாகேந்திரா தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பெண்ணும், வாடகைக் கார் ஓட்டுநரான பிரவீனும் துமகூரு மாவட்ட மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டனர்.
காவல்துறை தகவல்படி, நாகேந்திராவும் பெங்களூருவில் அறுவை சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்த அந்தப் பெண்ணும் முன்பு காதலித்து வந்ததாகவும், ஆனால் சமீபத்தில் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தப் பெண் நாகேந்திராவின் தொலைபேசி எண்ணை முடக்கியுள்ளார். சனிக்கிழமை காலை பெங்களூரு ஜெயநகரில் உள்ள அப்பெண்ணின் வீட்டில் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து நாகேந்திரா அவரை வாடகை காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. அப்பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் ஜெயநகர் காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்துள்ளனர்.