×

ஆன்லைனில் திருப்பதி லட்டு விற்பனை மோசடி- தேவஸ்தானம் நோட்டீஸ் 

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு என ஆன்லைனில் விற்பனை செய்த தனியார் ஆன்லைன் நிறுவனத்திற்கு தேவஸ்தானம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டு பிரசாதம் பக்தர்களின் உணர்வுபூர்வமான பிரசாதமாக கருதப்படுகிறது. எனவே கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யாவிட்டாலும் லட்டு பிரசாதத்தை வீட்டிற்கு பெற்று சென்று அதனை வீட்டில் வைத்து பூஜை செய்து சாப்பிடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மிகவும் புனிதமாக கருதக்கூடிய இந்த லட்டு பிரசாதத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனக்கென உரியதாக புவிச்சார் குறியீடுகள் சட்டத்தின் கீழ் லட்டுவை 1999 இல் பதிவு செய்தது. 

இந்த நிலையில் ஏழுமலையான் கோயிலில் ஊழியர்கள் லட்டு தயாரிக்கும் போட்டோ, பெருமாள் போட்டோ மீது லட்டு வைத்து  திருப்பதி  லட்டு என்று ஆன்லைனில் விளம்பரம் செய்து புஷ் மை கார்ட் என்ற இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் மூலம் புகாராக பெற்ற தேவஸ்தான அதிகாரிகள்  புஷ் மை கார்ட்டுக்கு ஆன்லைன் விற்பனை நிறுவனத்திற்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பினர்.  இதனையடுத்து புஷ் மை கார்ட் இணையத்தில் லட்டு விற்பனை  பட்டியலை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.