×

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் பலி.. ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்.. 

 


பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.  

ஒரிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவிலில் தேர் திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒடிசா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். ரத யாத்திரையின்  முதல் நாளிலேயே 600க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தனர்.   மூன்றாவது நாளான இன்று பூரி ஜெகன்நாதர் ரதத்தை பார்ப்பதற்காக அதிகாலையிலேயே  பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 

அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி  இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். புவனேஸ்வரின் நயப்பள்ளியைச் சேர்ந்த பிரேம் காந்த மோகந்தி (78), அதந்தர் பலிபட்னாவின் பிரபாத்தி தாஸ் (52), கோர்டாவின் பாசாந்தி சாஹோ (42) ஆகியோர் இறந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,  ஏராளமானோர் படுகாயம்  அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் புரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதில் ஆபத்தான நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 காவல்துறை அதிகாரிகல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி , இந்த துயர சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.  இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “சாரதாபலி கோயிலில் மகாபிரபுவை ஒரு முறையாவது நேரில் காண வேண்டுன் என்ற தீவிர ஆவலுடன் பக்தர்கள் இருந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ஒரு துரதிர்ஷவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனிப்பட்ட முறையில், நானும் எனது அரசாங்கமும் ஜெகன்நாதரின் பக்தர்கள் அனைவரிட்மும் மன்னிப்புக் கோருகிறோம்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு வலிமையை வழங்குமாறு  மகாபிரபு ஜெகன்நாதரிடம் பிரார்த்திக்கிறோம்.

இந்த அலட்சியம் மன்னிக்க முடியாதது. பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும். இதற்கு பெறுப்பேற்க வேண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.