×

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவுக்கு இதுதான் காரணம்..!! - வெளியான புதிய தகவல்..

 


குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்  ராஜினாமாவுக்காண  காரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. 

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் கடந்த  ஜூலை 21மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.  74 வயதான தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற அவரது  பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது.  ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்த அவர், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது , அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   

இருப்பினும் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.  தற்போது துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடயே ஜெகதீப் தன்கர்  ராஜினாமாவுக்கு நீதிபதி பதவி நீக்க விவகாரம் காரணம் என கூறப்பட்ட நிலையில்,  தன்கர் ராஜினாமாவுக்கு அழுத்தமான அரசியல் காரணம் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. 

 ஏற்கனவே அவர் அவமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், முந்தைய துணை குடியரசு தலைவர்களை விட ஜெகதீப்  தன்கருக்கு குறைவான வெளிநாட்டு பயணம் ஒதுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்தார் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.  ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றபோது துணை ஜனாதிபதிக்கான நெறிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.  நெறிமுறைகள் மீறல் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் ஜெகதீப் தன்கர்  அலுவலகம் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  வெளியுறவு விவகாரங்களை பொறுத்தவரையில்  முந்தைய துணை குடியரசுத் தலைவர்களை விட தன்கருக்கு குறைவான முக்கியத்துவம் அளித்ததாக அவர் கருதியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  

வெளியுறவு அமைச்சக தகவலின் படி,  இதுவரை ஜெகதீப் தன்கர்  நான்கு வெளிநாட்டு பயணங்கள் மட்டுமே மேற்கொண்டுள்ளார் எனவும், ஆனால் அவருக்கு முன்பு இருந்த வெங்கையா நாயுடு ஐந்து ஆண்டுகளில் 13 முறை பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.  மேலும், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்,  இந்தியா வந்தபோது ஜெகதீப் தன்கருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இதுபோன்று தொடர்ந்து அதிருப்தியில் இருந்ததாலே அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.