வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் சுட்டுக்கொலை - அதிகரிக்கும் பதற்றம்
விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொல்லப்பட்ட வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் உத்தர பிரதேசத்தில் மேலும் பதற்றம் அதிகரித்து இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்தின்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் திடீரென்று புகுந்ததில் விவசாயிகள் மீது கார் ஏறி கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாகனத்தை பிடித்து தீ வைத்து எரித்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நடந்த வன்முறையையும் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதையும் அமைச்சர் மறுத்து வந்த நிலையில் நடந்த சம்பவத்திற்கு ஆதாரமாக இந்த வீடியோ வெளியாகி அமைச்சரையும் அவரது மகனையும் வழக்கிலிருந்து தப்ப முடியாமல் செய்திருக்கிறது.
இந்த நிலையில் அந்த வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் ராமு காஷ்யப் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சம்பந்தப்பட்ட செய்தியாளர் ராமு காஷ்யப் குடும்பத்தினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். ராமுவின் கொலைக்கு உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்தியாளர் ராமு காஷ்யபிற்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்த வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல்களால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மேலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.