×

ராம்விலாஸ் பஸ்வான் மறைவு – லோக் ஜன்சக்திக்கு வெற்றிடமா ? வெற்றி மகுடமா ?

இந்திய அளவில் ஆளுமை செலுத்திய தலித் தலைவர்களில் முக்கியமானவர் ராம்விலாஸ் பஸ்வான் . பிகார் அரசியலில் கோலோச்சினாலும், இந்தியா முழுவதும் மிக தீவிர அரசியல் முன்னெடுப்புகளை செய்தவர். ஒவ்வொரு மாநிலத்தில், தலில் தலைவர்கள் தாங்களாகவே உருவாகிறார்கள் என்பதற்கு அவரும் விதிவிலக்கு அல்ல. காவல்துறைஅதிகாரியாக நல்ல பொறுப்பில் இருந்தவரை காலம் அரசியல் நோக்கி தள்ளி வந்தது. 1969 ல் தீவிர அரசியலில் நுழைந்தார். சுமார் 50 ஆண்டு காலம் பிகார் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர். தலித்
 

இந்திய அளவில் ஆளுமை செலுத்திய தலித் தலைவர்களில் முக்கியமானவர் ராம்விலாஸ் பஸ்வான் . பிகார் அரசியலில் கோலோச்சினாலும், இந்தியா முழுவதும் மிக தீவிர அரசியல் முன்னெடுப்புகளை செய்தவர்.

ஒவ்வொரு மாநிலத்தில், தலில் தலைவர்கள் தாங்களாகவே உருவாகிறார்கள் என்பதற்கு அவரும் விதிவிலக்கு அல்ல. காவல்துறைஅதிகாரியாக நல்ல பொறுப்பில் இருந்தவரை காலம் அரசியல் நோக்கி தள்ளி வந்தது. 1969 ல் தீவிர அரசியலில் நுழைந்தார். சுமார் 50 ஆண்டு காலம் பிகார் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர். தலித் வன்கொடுமைகள் நிகழும் இடங்களில் சமரசமில்லாமல் களத்தில் நின்றவர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் சம்பவங்களில் அவரின் கவனம் பெற்று நீதி கிடைத்த நிகழ்வுகள் ஏராளம். நெருக்கடி நிலைமையின், ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன.

இவர் இல்லாமல் மண்டல் கமிஷன் இல்லை. இவரால்தான் எஸ்டி/எஸ்சி வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலுக்கு வந்தது என்று கூறலாம். அந்த அளவிற்கு சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் கொடுத்தவர். 1990 களில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தார்.

முன்னாள் பிரதமர் விபி சிங் கொண்டு வந்த மண்டல் கமிஷனை அமல்படுத்தியதில் முக்கியமானவர். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கமிஷன் அறிக்கையை பிபி மண்டல் சமர்ப்பித்தார்.அந்த அறிக்கைதான் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தது. மண்டல் கமிஷனை விபி சிங் செயல்படுத்தியபோது, பீகார், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர் பஸ்வான். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியிருனக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதையும் தேசிய அளவில் சட்டமாக்கியதில் முக்கியமானவர்.

8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரயில்வே, தொலைத்தொடர்பு, சுரங்கம், உரத்துரை மற்றும் உணவு விநியோகம் என பல துறைகளையும் கையாண்டவர்.
ஆரம்பத்தில் லோக்தளம் கட்சியில் செயல்பட்டு வந்தவர் 2000 ஆண்டில், லோக் ஜன்சக்தி கட்சியை நிறுவினார். உத்தரபிரதேசத்தில் கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்க்கு துவக்குவதற்கு முன்பே தலித்களுக்கு என்று தலித் சேனா என்ற அமைப்பை உருவாக்கி இருந்தார். ஆனாலும், உத்தரப் பிரதேசத்தில் கன்சிராம் வளர்த்தைப் போல, இவரால் தலித் சேனாவை வளர்க்க முடியவில்லை. இதன்பின்னர் , 2000 ஆண்டில் லோக் ஜன்சக்தி கட்சியை தொடங்கினார்.

1977 பொதுத் தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு நுழைந்தவர் என்கிற பெருமை கொண்டவர். லோக் ஜன்சக்தி கட்சியை தொடங்கிய பின்னர் பல சமரசங்களுக்கு பஸ்வான் ஆளானார். ஆட்சி அமைக்கும் என கணிக்கப்படும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்வது, மத்திய அமைச்சர் பதவி பெறுவது என பல சமரசங்கள் செய்து கொண்டார். வாஜ்பாய், மன்மோகன் சிங், மோடி அமைச்சரவை என ஆறு பிரதமர்களின் கீழ் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளாக பாஜகவுடன் நெருக்கமான அரசியல் உறவு கொண்டிருந்தார்.
குடும்ப அரசியல் விமர்சனமும் அவர் மீது உள்ளது. சகோதரர்கள், மருமகன் என அனைவரும் கட்சியின் பொறுப்புகளில் உள்ளனர். தற்போது மகன் சிராஜ் பஸ்வானை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என காய் நகர்த்தி வந்தார். ஆனாலும் பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தாலும், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தன் கட்சி போட்டியிடாது என ’ஒரு விதமான’ சமரசத்துக்கு ஆளானார்.

எனிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக வளர்ந்து, தேசிய அளவில் கவனம் பெற்று, மத்திய அமைச்சராக சிறப்பாக செயல்பட்டதில் நாடாளுமன்ற வாதியாக அவர் எப்போதும் நினைவில் நிற்கக் கூடியவர். பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உ ள்ளது. ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு பீகார் தேர்தலில் அக்கட்சிக்கு வெற்றிடத்தை உருவாக்குமா ? வெற்றி மகுடத்தை கொண்டு வருமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நீரை . மகேந்திரன்