3 ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் சென்ற இளம்பெண் பரிதாப மரணம்! அதிரவைக்கும் பின்னணி
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹொன்னேமடு கிராமத்தைச் சேர்ந்தவர் நவீனா. இவர் பேயிங் கெஸ்ட் (PG) தங்குமிடத்தில் தங்கியிருந்து மாண்டியா நகரில் உள்ள ஒரு பழக்கடையில் பணிபுரிந்து வந்தார். ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை, அவர் வீட்டிற்குச் செல்வதாக பேயிங் கெஸ்ட் உரிமையாளரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. அவர் தனது நண்பர்களான அஸ்வினி, விஷ்ணு மற்றும் சிவகுமார் ஆகியோருடன் ஒரு காரில் கொம்மரஹள்ளி மலையை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கொம்மரஹள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது கார் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நவீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன.
நவீனா குடும்பத்தினர் இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என போலீசில் புகார் அளித்துள்ளனர். வேண்டுமென்றே சாலை விபத்தாக சித்தரிக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். புகாரில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை விபத்து நடந்தபோதிலும், இரவு சுமார் 11 மணியளவில்தான் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது மகளை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் செல்வதாகக் கூறி அவரது நண்பர்கள் வெளியே அழைத்துச் சென்றனர்.மேலும், நவீனாவை பாலியல் ரீதியாகத் தாக்க முயற்சித்துள்ளனர். அதற்கு நவீனா எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தை ஒரு சாலை விபத்தாகக் காட்டுவதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே வாகனத்தை மின்கம்பத்தில் மோதும் முன், அவரது உடலை காரின் முன் இருக்கையில் வைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நவீனாவின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், இறந்தவரின் மூன்று நண்பர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், இந்தச் சம்பவம் ஒரு கொடிய விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட கொலையா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.