ஏமாற்றி திருமணம் செய்து ரூ.60 லட்சத்தை பறித்த இந்தியர்- தாய்லாந்து பெண் கதறல்
கான்பூரைச் சேர்ந்த வியாபாரி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக தாய்லாந்து பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது திருமண நிலை குறித்து தன்னிடம் பொய் சொல்லி, சுமார் ₹60 லட்சத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு, பின்னர் தன்னைக் கைவிட்டுச் சென்றதாக தாய்லாந்துப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அப்சோர்ன் என அடையாளம் காணப்பட்ட அப்பெண், தாய்லாந்தில் உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலையை நடத்தி வருபவர் அப்சோர்ன். இவருக்கு கான்பூரைச் சேர்ந்த தோல் வியாபாரியான இர்பான் சமூக ஊடகங்கள் மூலம் பழக்கமாகியுள்ளார். அவர்களுக்கிடையேயான இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலந்துள்ளது. இர்பான் தனக்குத் திருமணமாகவில்லை என்று கூறி, அப்சோர்னை சந்திப்பதற்காக தாய்லாந்துக்கு பயணம் சென்றுள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் தாய்லாந்தில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, இர்பான் தனது தொழில் மற்றும் பிற நிதித் தேவைகளைக் காரணம் காட்டி தன்னிடம் பணம் கேட்கத் தொடங்கியதாக அப்சோர்ன் கூறியுள்ளார். இதனை நம்பி, தான் சம்பாதித்த பணம் மற்றும் உறவினர்களிடமிருந்து கடன் வாங்கி சுமார் ரூ.60 லட்சத்தை இர்பானுக்கு அப்சோர்ன் அனுப்பியுள்ளார்.
பணத்தைப் பெற்ற பிறகு, இர்பான் தன்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டதாகவும்.பல மாதங்களாகத் தன் கணவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதைத் தொடர்ந்து, அப்சோர்ன் இந்தியாவுக்குப் பயணம் செய்து, 2026 அக்டோபர் 6 அன்று கான்பூரில் உள்ள இர்பானின் இல்லத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது அப்சோர்னுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இர்பானுக்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னரே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி, மூன்று குழந்தைகள் இருந்ததை அறிந்து அப்சோர்ன் அதிர்ச்சியடைந்தார். தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, இர்பான் தன்னைத் தாக்கியதாக அப்சோர்ன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவருடன் தங்குவதற்கோ அல்லது தனது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கோ, இஸ்லாம் மதத்திற்கு மாறி புர்கா அணிய வேண்டும் என்று அவர் தன்னிடம் கூறியதாகவும் அப்சோர்ன் கூறினார். இதைத் தொடர்ந்து, அப்சோர்ன் மோசடி குறித்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இர்பானை கைது செய்தனர்.