×

செவிலியரை பலாத்காரம் செய்து கொன்ற மெக்கானிக்! தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்

 

தெலங்கானாவில் 21 வயது செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 34 வயதான பைக் மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோத்தகுடம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், துக்குகுடாவில் உள்ள பிரைம் கேர் மருத்துவமனையில் கடந்த ஏழு மாதங்களாக செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மருத்துவமனை ஊழியர்களுக்காக அருகில் கட்டப்பட்ட ஒரு அறையில் வசித்து வந்தார். அதே பகுதியில் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வருபவர் பீகாரை சேர்ந்த சனா உல்லா கான் (வயது 40). அவர் துக்குகுடாவில் வாடகை அறையில் தங்கி பைக் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்தார். 

செவிலியரான அந்த பெண் மருத்துவமனைக்கு செல்வது, அறைக்கு திரும்புவது என அவர் வசிப்பதை கான் கவனித்து, பலமுறை அவரது அறைக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு, தனது பணியை முடித்த பிறகு, அந்தப் பெண் தனது அறைக்குத் திரும்பினார். இதனை நோட்டமிட்டுக்கொண்டிருந்த கான், மதுபோதையில் நள்ளிரவுக்குப் பிறகு அவரது அறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. கதவு பூட்டப்பட்டிருந்ததால், அவர் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு விழித்த அப்பெண், கானைக் கண்டதும் அலறினார். ஆனால் அப்பெண்ணின் வாயை மூடி அவர் மயக்கமடையும் வரை கழுத்தை நெரித்ததாகவும், அதன்பின் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.  அந்த செவிலியர் சனிக்கிழமை காலை 9 மணிக்கு பணிக்கு வராததால் மருத்துவமனை ஊழியர்கள் பலமுறைக்கு அவரது அவரது தொலைபேசிக்கு அழைத்தனர். பக்கத்து அறையில் தங்கியிருந்தவர்களும் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. உடனே
மருத்துவமனை ஊழியர்கள் மதியம் அவரது அறைக்குச் சென்றபோது கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து பார்த்தபோது செவிலியர் இறந்த நிலையில், வன்கொடுமை செய்யப்பட்டிருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பீகாருக்கு தப்பியோட முயன்ற மெக்கானிக் கானை போலீசார் கைது செய்தனர்.