×

"மாணவர்கள் நலன விட தனியார் தான் உங்களுக்கு பெருசா தெரியுதுல?" - மத்திய அரசை கிழித்தெடுத்த சுப்ரீம் கோர்ட்!

 

நீட் எஸ்எஸ் தேர்வுகள் நவம்பர் 13 மற்றும் 14ஆம் தேதி நடைபெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியானது. மாணவர்கள் அனைவரும் இந்தத் தேர்வுக்காக வகுத்துக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டங்களின்படி தயாராகி வந்தனர். இச்சூழலில் திடீரென பாடத்திட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொண்டு தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டது. திடீர் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதுநிலை மருத்துவம் பயிலும் 41 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசையும், தேசிய தேர்வுகள் முகமையையும் நீதிபதிகள் சரமாரியாக திட்டினர். நீதிபதிகள் கூறுகையில், ''கடைசி நேரத்தில் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்தது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக தானே மேற்கொள்ளப்பட்டது? மருத்துவ தொழிலும், மருத்துவ கல்வியும் வியாபாரமாகிவிட்டது இந்திய தேசத்தின் மறக்க முடியாத சோகம். மருத்துவ கல்வியை ஒழுங்குபடுத்துவதும் கூட வணிகமயமாகிவிட்டது.

 

திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் பெரும்பாலும் பொது மருத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவுகள் எங்கே? திடீரென பாடத்திட்டங்கள் திருத்தம் செய்ய வேண்டிய காரணம் என்ன, பொது மருத்துவத்துக்கு முக்கியத்துவம் ஏன்? 12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் 100 சதவீதம் கேள்விகள் பொது மருத்துவத்திலிருந்தே வருகின்றன. ஒட்டுமொத்தத் தேர்வும் பொது மருத்துவத்தில் இருந்து வருகிறது. அப்படியென்றால் பொது மருத்துவம் படித்தவர்களை அதிகம் காலியான இடங்களில் நிரப்பும் திட்டமா? முதலீடு செய்த தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சமநிலையாக நடந்துகொள்ள வேண்டும் என அரசு நினைக்கிறதா?

உணர்ச்சியற்ற அதிகாரிகளின் கருணைக்காக இளம் மருத்துவர்களை விட்டுவிட முடியாது. இளம் மருத்துவர்களைக் கால்பந்து போல் அடித்து விளையாடவும் முடியாது. திருத்தப்பட்ட பாடத்திட்டங்களால் தனியார் மருத்துவ கல்லூரிகள்தான் பயன்பெறும். அரசுக் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதில்லை. தனியார் மருத்துவ கல்லூரிகளுக்காகப் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. மாணவர்களின் நலனைவிட, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நலன்தான் அரசுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்றனர்.