×

பிரபலங்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு... மத்திய அரசு மீது சந்தேகம் - விசாரணை கமிட்டியை அமைத்த சுப்ரீம் கோர்ட்!

 

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்பைவேர் நிறுவனம் உருவாக்கிய சக்திவாய்ந்த பெகாசஸ் என்ற ஸ்பைவேர் உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஒட்டு கேட்பினால் யாருக்கு சாதகம் என்ற கேள்வி எழுந்தால், அது மத்திய அரசை நோக்கி கைகாட்டுகிறது.

பெகாசஸை உருவாக்கிய என்எஸ்ஓ நிறுவனத்துக்கு பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த அரசுகளே வாடிக்கையாளர்கள். இந்திய அரசும் அதில் ஒன்று. இதனால் தான் ஒட்டு கேட்டது மத்திய அரசு தான் என எதிர்க்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்கள். அவர்களின் எதிர்ப்பால் இரு வாரங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி கிடந்தன. ஆனால் மத்திய அரசோ எதுவுமே பேசாமல் அமைதி காத்தது. பத்திரிகையாளர்கள் இந்து ராம், சசிகுமார், சிபிஎம் எம்பி ஜான், வழக்கறிஞர் எம்.எல். சர்மா உள்ளிட்ட 9 பேர் உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.

சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் செயல்பட உத்தரவிடக் கோரி அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா கண்ட், ஹிமா கோலி  ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் தேசத்தின் ரகசியங்கள் அடங்கியிருப்பதால் தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு கூறியது. 

அரசின் பதில் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் உச்ச நீதிமன்றமே இதுகுறித்து விசாரிக்க குழுவை அமைக்க முடிவு செய்தது. இன்று இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அத்தீர்ப்பில், "இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு பலமுறை அவகாசம் கொடுத்தோம். ஆனால் அவர்களோ அனைத்தையும் வீணடித்துவிட்டார்கள். தெளிவாக எதையும் கூறவில்லை. தேச பாதுகாப்பை கூறி ஒவ்வொரு முறையும் தப்பிக்க முடியாது. 

அதேபோல தேசத்தின் பாதுகாப்பில் நீதிமன்றம் தலையிடாது. அதேவேளையில் அதுதொடர்பாக வரும் பிரச்சினைகளை நீதிமன்றம் வாயை மூடிக்கொண்டும் இருக்காது. மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரித்தால் தான் உண்மை தெரியும். ஆகவே ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தொழில்நுட்ப நிபுணர்கள் குழு நியமிக்கப்படுகிறது. இந்தக் குழு பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.