×

"ஆடைக்கு மேல் மார்பகங்களை தொட்டால் குற்றமில்லை" - ஹைகோர்ட் தீர்ப்பை ரத்துசெய்த சுப்ரீம் கோர்ட்!

 

இந்தாண்டின் தொடக்கத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பு ஒன்று பெரும் சர்ச்சையானது. அதாவது தோல் மீது உரசாமல் ஆடைக்கு மேல் சிறுமியின் மார்பகங்களை அழுத்தினால் அது குற்றமில்லை என்றும், அது போக்சோ சட்டத்தின் கீழ் வராது எனவும் பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பளித்தார்.  இத்தீர்ப்பு குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பெரும் விவாதங்களையும் எழுப்பியது.

இதனை எதிர்த்து மகளிர் ஆணையம், தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உடனடியாக இம்மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்தது. தற்போது இவ்வழக்கு நீதிபதிகள் லலித், ரவிந்தீர பட், பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இறுதி விசாரணை முடிந்த பின் இன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துள்ளது இந்த அமர்வு.

"பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகள் ஈடுபடுவது பாலியல் நோக்கமே அன்றி வேறில்லை. அதற்கு தோல் மீது தோல் உரசுகிறதா என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. சட்டத்தின் நோக்கம் குற்றவாளியை சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக இல்லை என்பதை நீதிபதிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்மூலம் முன்னதாக நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கிய மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை குற்றவாளிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை ரத்துசெய்து 1 ஆண்டு தண்டனையாக மாற்றிய மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.