×

பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி... விசாரிக்க நால்வர் குழு - சுப்ரீம் கோர்ட் அதிரடி!

 

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி சென்றார். ஆரம்பத்தில் ஹெலிகாப்டர் மூலம் வருவதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்க பயணம் மேற்கொண்டார் பிரதமர். முதலில் ஹூசைன்வாலா பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்திற்கு பிரதமர் மோடி செல்வதாக இருந்தது. அந்தப் பகுதிக்குள் பிரதமரின் கார் நுழையும் முன்பே, அப்பகுதிக்குச் செல்ல தேவையான மூன்று சாலைகளையும் விவசாய அமைப்புகள் முற்றுகையிட்டன. டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் இருந்ததே இதற்குக் காரணம். 

இதனால் ஒரு பாலத்தில் பிரதமரின் பாதுகாப்பு கான்வாய் 20 நிமிடங்களில் நடு ரோட்டில் நின்றன.ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். ஆனால் இதற்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் பஞ்சாப் காங்கிரஸ் அரசை மத்திய உள்துறை அமைச்சகம் சாடியது. பாஜகவினர் நாடு முழுவதும் காங்கிரஸ் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு விளக்கம் தெரிவித்த சன்னி, "பிரதமரின் கான்வாயில் எந்த விதமான பாதுகாப்பு குறைபாடும் இல்லை. 

அவர் ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவே இருந்தது. ஆனால் அவர் கடைசியில் எங்களிடம் சொல்லாமல் கார் மூலம் வந்துவிட்டார். பாஜக கூட்டத்திற்கு 7,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 700 பேர் மட்டுமே வந்தனர். எனவே இதை மறைக்க தற்போது ஏதேதோ விஷயங்களை அவர்கள் காரணமாக சொல்கிறார்கள்” என்றார். இந்த விவகாரம் பெரிதானதையடுத்து உச்ச நீதிமன்றம் தாமாகவே விசாரணையை தொடக்கியது. தற்போது இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் பஞ்சாப் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப், சண்டிகர் டிஜிபி ஆகியோர் இடம்பெற்ற நால்வர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.