நள்ளிரவில் ரயிலில் திடீர் தீ விபத்து.. அலறி அடித்து ஓடிய பயணிகள்.. தெலங்கானாவில் பதற்றம்..
தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் பயணிகள் ரயிலில் உள்ள லக்கேஜ் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு தக்ஷன எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. நேற்று நள்ளிரவு தாண்டிய பிறகு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பகிடிப்பள்ளி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, லக்கேஜ் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலில் இருந்து ஏதோ புகை வருவதை உணர்ந்த பயணிகள், ரயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்து நிறுத்தி ரயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
தீ மளமளவென பரவி எரியத்தொடங்கியது. இதனையடுத்து தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ரயிலில் லக்கேஜ் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர். ஆனால் அதற்குள்ளாக அந்த பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தீ அணைக்கப்பட்ட பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே காவல்துறையினர், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் திடீரென ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது, பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.