"அடுத்த பிறவியில் நான் நிச்சயமாக ஒரு மருத்துவர் ஆவேன்" - நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை
மகாராஷ்டிராவில் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த 19 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் வைஜாபூர் தாலுக்காவில் உள்ள கண்டாலாவில் சூரஜ் சுபாஷ் ஷிண்டே என்ற மாணவர் அவரது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சூரஜ் வழக்கம் போலவே தனது வீட்டின் மேல்மாடி அறையில், நீட் நுழைவுத்தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார். திடீரென கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, சூரஜ் தற்கொலை செய்துகொண்டார். அந்த கடிதத்தில், "மன்னித்துவிடுங்கள், அம்மா மற்றும் அப்பா... அடுத்த பிறவியில் நான் நிச்சயமாக உங்களுக்காக ஒரு மருத்துவர் ஆவேன். தயவுசெய்து உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்," என எழுதியுள்ளார்.
நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இளைஞர்களின் போராட்டங்களுக்கும் வழிவகுத்தது. தர்மேந்திர பிரதான் பதவி விலகிய பிறகு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டங்களைக் கைவிட்டது. தேசிய தேர்வு ஆணையத்தின் (NTA) கட்டமைப்பு மற்றும் செயல்பாடு குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஏழு பேர் கொண்ட ராதாகிருஷ்ணன் குழு கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.