×

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… ஸ்புட்னிக்-வி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பூசிதான் அதைத் தடுக்கவும், எதிர்க்கவும் சரியான ஆயுதமாக உள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தடுப்பு மருந்து போதுமான அளவு கையிருப்பில் இல்லாததால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் தடுப்பூசியின் தேவையும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள்
 

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பூசிதான் அதைத் தடுக்கவும், எதிர்க்கவும் சரியான ஆயுதமாக உள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தடுப்பு மருந்து போதுமான அளவு கையிருப்பில் இல்லாததால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் தடுப்பூசியின் தேவையும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளை விட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது அதிக செயல்திறன் (91.6 சதவீதம்) கொண்டது. கொரோனா வைரஸுக்கு எதிராக அதிக பாதுகாப்பு திறனை உருவாக்குகிறது. இதனால் பெரும்பாலான இந்திய மக்கள் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ஒரு டோஸ் ரூ.995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் அடக்கம்.

தற்போது ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ரஷ்யாவிலிருந்து இரண்டு தொகுப்புகளாக ஸ்புட்னிக்-வி ஹைதராபாத்துக்கு வந்தடைந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா, “இதுவரை மொத்தமாக 2 லட்சத்து 10 ஆயிரம் தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. முதல் தொகுப்பாக 1,50,000 டோஸ்களும் இரண்டாம் தொகுப்பாக 60,000 டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.

மே மாத இறுதிக்குள் மொத்தமாக 30 லட்சம் (3 மில்லியன்) தடுப்பூசிகள் வழங்கப்படும். ஜூன் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான பணிகள் ஆரம்பித்துள்ளன. அதற்கான பணிகள் நிறைவுபெற்று ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி தொடங்கும். மொத்தமாக 850 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்யும்” என்றார்.

ஸ்புட்னிக்-வி இந்தியாவில் மூன்று கட்டங்களாக தயாரிக்கப்பட உள்ளது. முதலாவதாக ரஷ்யாவிலிருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும். இந்த முறையானது ஏற்கனவே தொடங்கிவிட்டது. இரண்டாவதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மூலம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கும் தடுப்பூசிகள் இந்தியாவிற்கு அனுப்பப்படும். ஆனால் அதனை இந்தியாவில் பல்வேறு பாட்டில்களில் நிரப்பி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக தடுப்பூசி தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்த தகவலை இந்திய நிறுவனங்களுக்கு ரஷ்ய தடுப்பூசி நிறுவனம் கொடுக்கும். அதன்பின்பே இந்தியாவில் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்.