×

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள்.. மீட்புக்கு அமைச்சர்களை அனுப்ப திட்டம் - சக்ஸஸ் ஆகுமா "ஆபரேஷன்" கங்கா? 

 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றோடு ஐந்தாவது நாளாகிறது. இது உலக நாடுகளிடையே அச்சம் ஏற்பட வைத்துள்ளது. குறிப்பாக இந்தியர்கள் அனைவரும் அங்கு சிக்கித்தவிக்கும் மாணவர்களை நினைத்து வருந்தியுள்ளனர். அவர்களை எப்படியாவது இந்திய அரசு மீட்டாக வேண்டும் என ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசும் ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்திய மாணவர்களை மீட்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. முதற்கட்டமாக 5 தமிழர்கள் உட்பட்ட 219 இந்தியர்கள் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அமைச்சர் பியூஸ் கோயல் வரவேற்றார்.

நேற்று இரண்டாவது விமானத்தில் 250 மாணவர்களும் 3ஆவது விமானத்தில் 240 மாணவர்களும் தாயகம் திரும்பினர். மேலும் 2 விமானங்களில் அதிகப்படியான மாணவர்களை இந்திய அரசு அழைத்து வந்துள்ளது. இச்சூழலில் எல்லைகளைக் கடக்க முயன்ற இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவத்தினர் தாக்குவதாக தகவல் வெளியானது. மேலும் அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதிலிருந்து உடனடியாக இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி பேச வேண்டு என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.


இதன் காரணமாக பிரதமர் மோடி அடுத்தடுத்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நேற்றைய ஆலோசனையில் மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். இச்சூழலில் இன்று காலையும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான ஹர்தீப் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள், ருமேனியா, ஹங்கேரி வாயிலாக மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது போர் தீவிரமடைந்துள்ளதால் இந்திய மாணவர்கள் அவரவர் தங்கியுள்ள இடத்தை விட்டுவெளியே வரக்கூடாது. பொதுவெளியில் நடமாடக் கூடாது. எங்கு சென்றாலும் குழுவாக செல்ல வேண்டும். இந்தியர்களுக்காக உக்ரைன் அரசு இலவச ரயில் சேவைகளை இயக்க உறுதியளித்துள்ளது. ஆகவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். விரைவில் மீட்டு வருவோம் என இந்திய வெளியுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.