×

"மாமனாரின் சொத்தில் மருமகன் உரிமை கொண்டாட முடியாது" - கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

மாமானாரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அனுபவிக்கவோ, உரிமை கோரவோ மருமகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கன்னூரிலுள்ள தலிபரம்பாவை சேர்ந்தவர் ஹென்றி தாமஸ். இவருக்கு ஒரேயொரு மகள் இருக்கிறார். அவரை டேவிஸ் ரபேல் என்பவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது செயின்ட் பால் தேவாலாயம் சார்பில் பரிசுப் பத்திரத்தின் மூலம் டேவிஸ் ஹென்றியின் சொத்தை எழுதி வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

அதேபோல மாமானார் ஹென்றி மருமகன் டேவிஸை தனது குடும்பத்தில் ஒருவராக தத்தெடுத்தாகவும் சொல்லப்படுகிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி மாமானாரின் சொத்தில் டேவிஸ் சட்டப்பூர்வ உரிமை கோரியிருக்கிறார். இதை எதிர்த்து ஹென்றி பையனூர் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தனது மருமகன்ன் டேவிஸ் தனது சொத்துக்களில் அத்துமீறி நுழைவதற்கும் , சொத்து மற்றும் வீட்டின்  உடைமைகளை அனுபவிப்பதற்கும் தலையிடுவதற்கும் நிரந்தர தடை உத்தரவு கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணையின்போது ஹென்றி தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், டேவிஸ் தனது சொந்த பணத்தில் ஒரேயொரு வீடு மட்டுமே கட்டியிருக்கிறார் என்றும் அவர் தனது வீட்டில் தான் வசித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. ஆகவே அவருக்கு தன் சொத்தில் சட்டப்பூர்வ உரிமை கோர அனுமதி இல்லை எனவும் வாதிட்டார். டேவிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குடும்பத்திற்காக தேவலாய அதிகாரிகளால் கூறப்பட்ட பரிசுப் பத்திரம் நிறைவேற்றப்பட்டதால், சொத்தின் தலைப்பே கேள்விக்குரியானது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், மருமகனான டேவிஸுக்கு வீட்டில் வசிக்க தார்மீக உரிமை இருக்கிறது என்று உத்தரவிட்டது. 

ஆனால் அதேசமயம் ஹென்றியின் சொத்தில் டேவிஸ் உரிமை கோர எந்தவிதமான சட்ட உரிமையும் இல்லை என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் டேவிஸ் மேல் முறையீடு செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், "ஹென்ரியின் மகளுடனான திருமணத்திற்குப் பிறகு, குடும்பத்தின் ஒரு உறுப்பினராக தத்தெடுக்கப்பட்டதாக மருமகன் டேவிஸ் வாதிடுவது வெட்கக்கேடானது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உறுதிசெய்தது.