×

மணிப்பூர் வன்முறையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் பலி..

 

 மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயம் அடைந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ந்தேதி பேரணி நடத்தினர். அந்த பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, மணிப்பூர் மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இதுவரை இந்த கலவரத்தால்160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட 50,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கலவரம் சற்று ஓய்ந்திருந்தாலும், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய வண்ணமே உள்ளன.  விஷ்ணுபூர்-சூரசந்த்பூர் எல்லையில் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. நிவாரண முகாம்களில் தங்கியிருந்த சிலர்,  விஷ்ணுபூர் மாவட்டத்தின் உகா தம்பக் கிராமத்தில் உள்ள தங்களது வீடுகளுக்கு திரும்பினர். அங்கு நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் தந்தை, மகன் உட்பட 3 பேரை சுட்டுக் கொன்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக , சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள பூஜாங்க் மற்றும் சாங்டோ கிராமத்துக்குள் புகுந்த சிலர் சிறிய ரக ராக்கெட் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், சிலர் காயமடைந்தனர்.  விஷ்ணு மாவட்டம் தேரசோங்சாங்பி பகுதியில்  துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காவலர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இதேபோல் இம்பால் மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடும், சில இடங்களில்  அடையாளம் தெரியாத நபர்கள் வீடுகளுக்கு தீ வைத்துச் சென்றனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொல்லபட்டதுடன், 16 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.