மதுபோதையில் காரை ஓட்டிச் சென்ற சீரியல் நடிகர் கைது
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சீரியல் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல சீரியல் நடிகர் சித்தார்த் பிரபு.இவர் மலையாள சீரியல்களில் நகைச்சுவை மற்றும் குடும்ப கதைகளில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி தனியார் பாதுகாப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.சித்தார்த் பிரபு நேற்று இரவு தனது காரில் கோட்டயத்தில் இருந்து வந்தார். அப்போது அவரது கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற லாட்டரி விற்பனையாளர் ஒருவரின் மீது மோதியது. இதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் மடைந்தார்.இதையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். மேலும் விபத்து குறித்து தகவலறிந்து போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் விபத்தில் காயமடைந்த லாட்டரி வியாபாரியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தை ஏற்படுத்திய குறித்து நடிகர் சித்தார்த் பிரபுவை பொதுமக்கள் சிலர் தட்டிக்கேட்டனர்.
அப்போது நடிகர் குடிபோதையில் இருந்ததை பொதுமக்கள் அறிந்தனர். அவர், தன்னை கேள்வி கேட்டவர்களை திட்டி தாக்கினார். அவரை சம்பவ இடத்தில் இருந்த போலீசார் தடுத்தனர்.அப்போது அவர்களையும் நடிகர் தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் சித்தார்த் பிரபுவை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்பு நடிகர் சித்தார்த் பிரபுவை சிங்கவனம் போலீசார் கைது செய்தனர்.குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, தட்டிக் கேட்ட பொதுமக்கள் மற்றும் போலீசாரை நடுரோட்டில் நடிகர் தாக்கிய சம்பவம் கோட்டயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.