×

மூச்சுவிட தொடங்கிய தலைநகர்... திறக்கப்படும் பள்ளி, கல்லூரிகளின் கதவுகள்!

 

இந்திய தலைநகர் சில ஆண்டுகளாகவே காற்று மாசால் திணறி வருகிறது. தற்போது பனிக்காலம் வேறு நெருங்கிவருவதால், பனிக்காற்றோடு சேர்ந்து மாசு துகள்கள் கலந்து புகை மண்டலமாகக் காட்சியளிக்கின்றன. இதனால் டெல்லி அபாய கட்டத்தில் இருக்கிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் டெல்லியின் சுற்றுச்சூழல் இந்த வாரம் நிலைமை மேலும் மோசமடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் உத்தரவிட, முழு ஊரடங்கை அமல்படுத்தியது டெல்லி அரசு. அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தனியார் நிறுவனங்களும் இதே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றுமாறு அரசு கேட்டுக்கொண்டது. அதேபோல கட்டுமான தொழில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதேபோல அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக அனைத்து கல்வி நிறுவனங்களும் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெறும். மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் சில நாட்களுக்கு முன் அரசு உத்தரவிட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளால் டெல்லியில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது. இதனால் நவம்பர் 29ஆம் தேதி முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்துகொள்ள அனுமதி வழங்கியுள்ளது அரசு. அதேபோல மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.