×

"டிஎன்ஏ சோதனையை காட்டி பாலியல் குற்றவாளிகள் எஸ்கேப் ஆக முடியாது" - உச்ச நீதிமன்றம் கருத்து!

 

2010ஆம் ஆண்டு விராலிமலையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிறுமியை வன்கொடுமை செய்தவர் மூக்கன் என்கின்ற முருகன். இவர் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர். சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயம்,  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி தாயாரிடம் தெரிவிக்க, அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மூக்கனை கைது செய்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மூக்கனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மூக்கன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றமும் கடந்த ஜூலை மாதம் மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில், இதனை எதிர்த்து முருகன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பை உறுதிசெய்த நீதிமன்றம், மருத்துவ பரிசோதனை, காயம், உள்ளிட்டவை குற்றவாளிக்கு எதிராக உள்ளதைச் சுட்டிக்காட்டியது. டிஎன்ஏ பரிசோதனையை மட்டும் காரணம் காட்டி பாலியல் குற்றவாளிகள் குற்ற வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது என கருத்து கூறிய நீதிமன்றம் மகிளா நீதிமன்றம் கொடுத்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்தது.