×

மருத்துவ மேற்படிப்பு : OBC பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு செல்லும் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

 


மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பொருளாதாத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டிற்கு நடப்பாண்டு மட்டும் அனுமதி அளித்து  உத்தரவிட்டுள்ளது.

முதுகலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில்  ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் இருந்ததால்,  திமுக உள்ளிட்ட கட்சிகள்  வழக்கு தொடர்ந்தன.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இட ஒதுக்கீடு  வழங்குவது செல்லும் என தெரிவித்தது. ஆனால் இதனை மத்திய அரசு செயல்படுத்தாமல் இருந்ததால், மீண்டும் உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து மத்திய அரசு மருத்துவ உயர்படிப்புகளில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் உயர்சாதி ஏழையினருக்கு 10% வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர்கள் உள்ளிட்ட பலர்  மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஆண்டு அக்டோபரில் நடக்கவிருந்த முதுநிலை மருத்துவ கவுன்சில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு  நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபண்ணா  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  2 நாட்களாக இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிப்திகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தனர். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான  10% இடஒதுக்கீட்டை  நடப்பாண்டு மட்டும் வழங்க  அனுமதியளித்துள்ளது. 

தற்போது  இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு குறித்து மார்ச் 3 ஆவது வாரத்தில் விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.