×

ஏடிஎம்மில் இனி பணத்தை திருட முடியாது; எஸ்பிஐ புது திட்டம்!
 

 

ஏடிஎம்மில் திருட்டுப் போவதை தவிர்க்க எஸ்பிஐ வங்கி ஓடிபி திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

நவீனமயமாகியிருக்கும் இக்காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே பல கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக ஏடிஎம் இயந்திரங்களில் அதிகளவில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஒருவரது ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் புகார் அளிப்பதற்குள், ஏடிஎம் கார்டில் இருந்து ஆயிரக்கணக்கில் திருடப்படும் சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.

இந்த நிலையில், ஏடிஎம்மில் பணம் திருட்டு போவதைத் தடுக்க எஸ்பிஐ வங்கி ஓடிபி திட்டத்தை கொண்டு வந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் நபர்கள் ஓடிபி எண்ணை பயன்படுத்தி பணம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதன் மூலம் கொள்ளை சம்பவங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டதால் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம் தற்போது 24 மணி நேரம் வகையில் செயல்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்கள் கார்டை செலுத்தியதும் அவர்களது பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். எடுக்க விரும்பும் பணத்தை குறிப்பிட்ட பிறகு வங்கிக் கணக்குடன் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபி எண்ணை சரியாக பதிவிட்டால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். இதன் மூலம், ஏடிஎம் மையத்தில் நடைபெறும் மோசடிகளை தவிர்க்க முடியும் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் கூறுகிறார்கள். வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டை தொலைத்து விட்டால் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது கார்டை செயலிழக்கச் செய்வோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.