×

"God Bless You சித்தார்த்" - மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் சாய்னா நேவால்!

 

அண்மையில் நடிகர் சித்தார்த்தின் ட்வீட் ஒன்று கடும் விமர்சனத்துக்குள்ளானது. அந்த ட்வீட்டால் ட்விட்டரில் பெரும் பிரளயமே வெடித்துவிட்டது. இவையனைத்திற்கும் ஆணிவேர் பிரதமர் மோடி பாதுகாப்பு குளறுபடி விவகாரம் தான். பஞ்சாப் எல்லைக்குள் நுழையும் முன்பே பிரதமரின் கார் செல்லும் மூன்று வழிகளை விவசாய அமைப்புகள் முற்றுகையிட்டன. இதனால் பாதுகாப்பு குறைபாடு எனக்கூறி அவரின் கார் டெல்லி திரும்பியது. பஞ்சாப் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இதனால் காங்கிரஸ், பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. 

இந்தச் சமயம் தான் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஒரு ட்வீட் செய்தார். பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு நாடு பாதுகாப்பாக இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டிருந்தார். பாஜகவுக்கு ஆதரவாக அந்த ட்வீட் இருந்ததால், அதனை விமர்சிக்கும் வண்ணம் Shuttle Cock-ஐ (பேட்மிண்டன் பந்து) Subtle Cock- என மாற்றி என ட்வீட் செய்தார் சித்தார். அதாவது Subtle என்றால் ஒரு விஷயத்தை நுணுக்கமாக சொல்வது. நுட்பமாக பாஜகவுக்கு சாய்னா ஆதரவு தெரிவிக்கிறார் என்பதே சித்தார்த் ட்வீட்டின் சாராம்சம். ஆனால் அதிலுள்ள Cock என்ற வார்த்தை தான் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இரட்டை அர்த்தமாக பொருள் கொள்ளப்பட்டது.

இதற்கு சாய்னா கண்டனம் தெரிவிக்க, விளையாட்டு வீரர்கள், பாஜக அமைச்சர்கள் என பலரும் சித்தார்த்தை கடுமையாக விமர்சித்தனர். இதற்குப் பின் விளக்கமளித்த சித்தார்த், Cock and Bull என்ற Idiom-யை தான் உதாரணம் காட்டினேன். அதில் சாய்னாவை இழிவுப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டது அல்ல. ட்வீட்டை தவறாக சித்தரிக்காதீர்கள் என கூறினார். Cock and Bull என்றால் ஏமாற்றும் நோக்கத்தில் திரிக்கப்படும் கதை. அதாவது பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஏமாற்று கதையை சாய்னா உருவாக்கியதாக சித்தார்த் சொல்லியிருக்கிறார். 

ஆனால் ஏற்க மறுத்த தேசிய மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் விசாரணை நடத்தி சித்தார்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர்களுக்கு(டிஜிபிக்களுக்கு) கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து சித்தார்த் தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கோரினார். அதில், "நகைச்சுவை என்று கருதி அந்த ட்வீட்டை போட்டேன். வார்த்தை விளையாட்டாக பதிந்த அந்த ட்வீட் தவறாக பொருள் கொள்ளப்பட்டது. உண்மையிலேயே நான் பெண்ணியவாதிகளின் ஆதரவாளர். நீங்கள் பெண் என்பதால் அவ்வாறு விமர்சிக்கவில்லை.


நீங்கள் எனது மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை சாய்னாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர், "சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி. சித்தார்த் கூறியது ஏன் வைரலானது என எனக்கே தெரியவில்லை. எனக்கே ஆச்சர்யமாக தான் இருந்தது. சித்தார்த்தின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைத்து தாக்கக் கூடாது. பெண்களை இதுபோன்று வசைபாடக்கூடாது. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பார்” என்று கூறியுள்ளார்.