×

பம்பைக்கு ரெட் அலர்ட்... சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை!

 

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. இம்மாதம் தொடங்கிவிட்டாலே மாலை, கறுப்பு வேட்டி சகிதமாக ஐயப்ப பக்தர்கள் உலவுவார்கள். குறிப்பாக மகரவிளக்கு சீசனும் தொடங்கிவிடும். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டனர். ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் சில நாட்களாவே கனமழை பெய்து வருகிறது.

இதனால் பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மண்சரிவு, நிலச்சரிவும் உண்டாகியுள்ளது. அணைகளில் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வண்ணமே இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் வருகைக்கு பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பத்தினம்திட்டா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளில் நீர் மட்டம் தொர்ந்து உயர்ந்து வருகிறது. 

பம்பை நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காக்கி-ஆனத்தோடு அணைகளிலிருந்து மதகுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என்பதால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் பக்தர்கள் ஐயப்பயன் கோயிலுக்கு வருவது பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கும். ஆகவே இன்று ஒருநாள் (நவ.20) மட்டும் பம்பை மற்றும் சபரிமலைக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் இன்றைய தேதியில் தரிசனத்துக்கு முன்பதிவுசெய்த பக்தர்கள், சன்னிதானத்தில் ஐயப்பயனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.