"லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு”- மோகன் பகவத்
லிவ் இன் உறவில் இருப்பது நவீனத்துவம் அல்ல... கலாச்சார சீரழிவு என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், “லிவ் இன் உறவில் இருப்பது நவீனத்துவம் அல்ல... கலாச்சார சீரழிவு. ஜென் Z தலைமுறையினர் நல்லவர்கள் மற்றும் உணர்வுப்பூர்வமானவர்கள். ஜென் Z தலைமுறையினர் அமைதியாக ஒரு விஷயத்தை சிந்திப்பதில்லை. உண்மையான விஷயங்கள் ஜென் Z தலைமுறையினரை கவர்கிறது. LGBTQ+ மக்கள் உலகெங்கிலும் இருப்பது போல இந்தியாவிலும் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களைத் தாழ்வாகப் பார்க்காமல் மனித உரிமைகளோடு வாழ அனுமதிக்க வேண்டும். நமது பாரம்பரியம் அவர்களை ஒருபோதும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கவில்லை, அவர்களின் இருப்பை அங்கீகரித்தது. அவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களும், கும்பமேளாவில் பங்கேற்கும் மகாமண்டலேஷ்வர் நிலைகளும் உண்டு.
திருமணம் செய்ய விருப்பம் இல்லையென்றால், பிரம்மச்சாரியாக இருங்கள். இந்த 'லிவ்-இன்' (Live-in) உறவு என்றால் என்ன? விருப்பம் இருக்கும் வரை சேர்ந்து வாழ்வது, விருப்பம் இல்லையென்றால் பிரிந்து செல்வது. இதில் பொறுப்புணர்வு எங்கே? இப்படிப்பட்ட உறவிலிருந்து என்ன வளர்ச்சி ஏற்படும்? திருமணம் மனித வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் உருவாக்குகிறது. லிவ்-இன் உறவுகளின் உண்மை நிலையை உலகம் முழுவதும் காணலாம். உங்களுக்கு நவீனத்துவம் தேவை, காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும். ஆனால் இது நவீனத்துவம் அல்ல. இது சீரழிவு. இது மேற்கத்திய வாழ்க்கை முறையை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாகும். நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் எதையும் யோசிக்காமல் கீழ்ப்படியும் சூழல் இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் அனைத்திற்கும் கேள்வி கேட்கிறார்கள். கேள்விகள் கேட்கும் தலைமுறை இது. இளைஞர்களுக்கு உரிய காரணங்களுடன் நியாயமான விளக்கங்களையும், அன்பையும் நேரத்தையும் நாம் வழங்க வேண்டும்” என்றார்.