முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வெளியே உற்பத்தி ஆலை அமைக்கும் ராயல் என்ஃபீல்ட்
தமிழகத்தில் மட்டுமே உற்பத்தி ஆலையை வைத்திருந்த பிரபல இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் ஆந்திரத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தலைமைச் செயலகத்தில் ராயல் என்ஃபீல்ட் புல்லட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். திருப்பதி மாவட்டம், ரல்லக்குப்பம் பகுதியிலுள்ள சத்தியவேடு மண்டலத்தில் ரூ. 2,500 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள புல்லட் மோட்டார் சைக்கிள் உற்பத்தி ஆலை குறித்த விவரங்களை அவர்கள் முதலமைச்சரிடம் விளக்கினர். அதில் இந்த ஆலை ஆண்டுக்கு 9,00,000 மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிநவீன உற்பத்திப் பிரிவுடன், இந்த வளாகத்தில் பிரத்யேக சோதனைத் தளம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர்.&டி) மையம், மற்றும் விற்பனையாளர் பூங்கா போன்ற பல நவீன வசதிகளும் இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 15,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தங்கள் நிறுவனம் 'ஃப்ளையிங் ஃப்ளீ சி6' என்ற மின்சார புல்லட் மாடலை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளுக்கு அவர்கள் தங்கள் சிறப்பு நன்றியைத் தெரிவித்தனர். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த தொழிற்சாலையை அமைக்க மாநில அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல் வாகனத்தைப் பரிசாக முதல்வருக்கு வழங்கியதை பெற்றுக்கொண்டார். பின்னர் ஹெல்மெட் அணிந்து புல்லட்டில் சி.இ.ஓ.கோவிந்தராஜனுடன் அமர்ந்து தனது சிறப்பு ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்தத் திட்டம், ஆந்திரப் பிரதேசத்தில் புதிய தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் ஒரு மையப் புள்ளியாக அமையவிருப்பதோடு, ராயல் என்ஃபீல்ட் பிராண்டை மேலும் வலுப்படுத்தும். இந்த முன்னெடுப்பின் மூலம், மாநிலத்தில் உள்ள தொழில்களுக்கும் முதலீடுகளுக்கும் சிறந்த ஊக்கத்தை அளிப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.