×

தெலங்கானா: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி..

 

தெலுங்கானா மாநிலம் சங்கர் ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட  தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்துச் சிதறியது.  இதில் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 100 மீட்டருக்கும் அப்பால் தூக்கி வீசப்பட்டனர். 

இந்த விபத்தில் பத்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர்;  பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.  உடனடியாக தகவல் அறிந்து  வந்த தீயைணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  எட்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  தீக்காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் , விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் போலீஸார் திவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.