“RSS தான் கல்வித்துறையை நடத்துறாங்க..”- ராகுல்காந்தி
ஒரு முட்டாள் தனது பிம்பத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய முட்டாள் கும்பலையே உருவாக்குகிறான் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
மக்களவையில் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் பொதுத்தேர்வு மசோதா மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் வகையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. தேர்வு முறைகேடுகளால் இந்தியாவின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்கவில்லை. இந்த விவாதத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு தைரியம் இல்லாமல் பயப்படுகின்றனர். அதனால்தான் அவர்கள் கலந்துக்கொள்ளவில்லை.
நாட்டின் எதிர்காலத் தலைமுறையினர் நம் தெருக்களில் வெளிப்படுத்திய செயல்களைக் கண்டு நான் மிகுந்த உற்சாகமும் நம்பிக்கையும் கொண்டேன். ஒவ்வொரு இந்தியரும் மாணவர்கள் போராட்டம் குறித்துப் பெருமைப்பட வேண்டும். கற்றுக்கொள்ளவும், அறிவை வளர்த்துக்கொள்ளவும் ஆர்வமுள்ள மாணவர்கள் ஒருபுறம் இருக்க, சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்காத ‘முட்டாள்கள்' மறுபுறம் இருக்கிறார்கள். முட்டாள்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணுகிறார்கள். டெல்லியில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை பாஜகவினரின் குழந்தைகளே ஆதரிப்பார்கள். இது கோபமோ, வன்முறையோ அல்லது வெறுப்போ அல்ல, நாட்டு இளைஞர்கள் மற்றும் எதிர்கால தலைமுறையினரின் ஆழமான வெளிப்பாடாகும். இந்திய கல்வி அமைப்பின் ஆன்மாவையே ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றியுள்ளது. தர்மேந்திர பிரதானின் ராஜினாமா வெறும் வெளித்தோற்றம் மட்டுமே. கல்வி அமைச்சகத்தை அவர் ஒருபோதும் நடத்தவில்லை. அதை ஆர்.எஸ்.எஸ். தான் நடத்துகிறது.
மாணவர்கள் உண்மையில் எதற்காக கோபமாக இருக்கிறார்கள்? அவர்களை மாணவர்களாக இருக்கவே அனுமதிப்பதில்லை. தங்களின் ஆர்வத்தைப் பின்பற்றவும், சுதந்திரமாக பேசவும், விரும்பிய கேள்விகளை எழுப்பவும் அனுமதி இல்லை. அதற்கு பதிலாக, ஆர்.எஸ்.எஸ். கூறும் வரலாற்றையும் சிந்தனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இன்று ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற துணைவேந்தர்களே உள்ளனர். தர்மேந்திர பிரதான் ஒரு குறியீடு மட்டுமே. உண்மையான எதிரி ஆர்.எஸ்.எஸ். தான். உங்களை மாணவர்களாக இருக்க விடாமல் தடுத்து, ‘அந்தபக்தர்களாக’ மாற்றவே அவர்கள் விரும்புகிறார்கள். இது இந்தியாவின் ஆன்மாவின் குரல்: நாங்கள் ஒருபோதும் உங்கள் ‘அந்தபக்தர்கள்’ ஆக மாட்டோம். எங்கள் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க அனுமதிக்க மாட்டோம். இதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என்றார்.