தீவிரவாத தாக்குதல்! சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் - ராகுல் காந்தி கடிதம்!
Apr 29, 2025, 13:02 IST
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்பதை நாம் காட்ட வேண்டும் என ராகுல் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.