×

புதுச்சேரியில் கடந்தாண்டை விட 46.18 செ.மீ. கூடுதல் மழைப்பொழிவு!

 

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டை மட்டுமல்ல புதுச்சேரியின் ஒருசில பகுதிகளையும் ஆட்டிப்படைத்திருக்கிறது. 15 வருடங்களுக்குப் பின் காரைக்காலில் மீண்டும் அதிகளவில் மழை பதிவாகியிருக்கிறது. அதேபோல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. நெற்பயிர்கள் மழையில் மூழ்கி நாசமாகியுள்ளன. அந்த வகையில் புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 46.18 செ.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளதாக ஆட்சியர் பூர்வா கார்க் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி முதல் பெய்து வருகிறது. இதுவரை 61.1 செ.மீ. அளவில் மழை பெய்துள்ளது. எப்போதும் புதுச்சேரியில் 138 செ.மீ. அளவுக்கு சராசரி மழை பதிவாகும். ஆனால் இந்தாண்டு 184.18 செ.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. புதுச்சேரியில் மழை நீர் தேங்கிய அனைத்து இடங்களிலும், மழை வெள்ள நீர் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. 

இந்த மழையில் 32 குடிசைகள் உள்ளிட்ட 47 வீடுகள் இடிந்து பாதித்துள்ளன. இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர். உயிர் சேதம் எதுவும் இல்லை. 194 நிவாரண முகாம்கள் மூலம் 82,083 உணவுப் பொட்டலங்கள் அரசு மற்றும் தன்னார்வர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகம் மழை தாக்கத்தின் விளைவுகளை எதிர்கொள்ள அனைத்து வித முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. அவசர கால பணியில் ஈடுபடும் துறையினரும் களத்தில் உள்ளதால், புதுச்சேரி மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.