×

தலைமைச் செயலருக்கும் கொரோனா... மூச்சிறைக்க வைக்கும் 3ஆவது அலை! 

 

தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதித்திருந்த போதும் புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியது. இதனால் தென் மாநிலங்களைச் சேர்ந்த பலரும் புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடினர். அளவுக்கு அதிகமாக மக்கள் கூடியதால் தொற்றும் வேகமெடுக்க ஆரம்பித்தது. தமிழ்நாட்டிற்கு முன்பே அங்கே தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்துகொண்டே சென்றது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனி குமாரும் ஒருவர். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அதேநேரத்தில் தலைமை செயலரின் உடல்நிலையை சுகாதாரக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 4,187 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் புதுச்சேரி - 956, காரைக்கால்- 126, ஏனாம்- 7, மாஹே- 18 என மொத்தம் 1,107 (26.44 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,883 ஆகவும், இறப்பு விகிதம் 1.41 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 866 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதுச்சேரியை பொருத்தவரையில் ஜிப்மரில் 98 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 37 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.