வயநாடு இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி..!!
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி இன்று (அக்.23) வேட்புமனு தாக்கல் செய்தார் .
2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதில் ஏதேனும் ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டிய சூழல் உருவானதை அடுத்து, ஜூன் 17 அன்று ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரியங்கா காந்தி வதேராவை வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ். இதனையடுத்து இன்று பிரியங்கா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனையொட்டி அவர் நேற்று தாய் சோனியா காந்தியுடன் கேரளா வந்து சேர்ந்தார். முன்னதாக விமானம் மூலம் மைசூரு வந்த அவர்கள் இருவரும் அங்கிருந்து சாலை மார்க்கமாக கேரளா வந்தடைந்தனர். இந்நிலையில் இன்று (புதன்கிழமை) வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தொடர்ந்து மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு முன் வயநாட்டில் கல்பேட்டா பேருந்து நிலைய பகுதியில் பிரியங்கா, ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தினர். இதனையொட்டி வயநாடு மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் கல்பேட்டா பகுதியில் குவிந்தனர்ர். வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார்.