×

"மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டாம்" - அரசு அறிவிப்பு!

 

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஒரே வாரத்தில் மும்மடங்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அபாயகரமான டெல்டாவும் அதை விட உக்கிரமாகப் பரவக்கூடிய ஒமைக்ரானும் ஒருசேர இணைந்து பரவி வருவதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் மாநில அரசுகள் அரசு அலுவலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அந்த வகையில் மத்திய அரசு அலுவலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரதமர் அலுவலக விவகார துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதிப்படுத்தியுள்ளார். 

அதேபோல கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் ஊழியர்களுக்கும் பணிக்கு வருவதிலிருந்து விலக்குஅளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசு ஊழியர்களுக்கான பயோ மெட்ரிக் பதிவு நடைமுறை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஊழியர்கள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருத்தல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை அந்தந்த துறை தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.