×

12 எம்பிக்கள் சஸ்பெண்ட்... மன்னிப்பு கேட்டால் அனுமதிக்கிறோம் - மத்திய அரசு கறார்!

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் இதற்கு முன்பே கூட்டத்தொடர் தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஏனென்றால் கடந்த ஜூலையில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால் கூட்டத்தொடரின் பாதி நாட்கள் கடும் அமளியிலேயே முடிவடைந்தது. இதனால் அப்போதே 12 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சுமுகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளிடம் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். ஆனால் அங்கேயே ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டனர் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள். பிரதமரிடம் ஏராளமான கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இச்சூழலில் நேற்று மக்களவை தொடங்கிய உடனே வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரிக்க, விவாதமின்றி மசோதா நிறைவேறியது. இதையடுத்து மாநிலங்களவை ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டது. அங்கேயும் எதிர்க்கட்சியினர் விவாதிக்க கோரிக்கை விடுத்தனர். அவை தலைவர் மறுக்கவே, அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையின் நடத்தை விதிகளை மீறியதாக 12 எம்பிக்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


இதனை எதிர்க்கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்விட்டரில், "அவையின் மாண்பை காக்கவே 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அவை தலைவரிடம் மற்ற அவை உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கேட்டால் அவர்களின் இடைநீக்க உத்தரவை திறந்த மனதுடன் பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது. மசோதாக்கள் மீது ஆரோக்கியமான விவாதம் மட்டுமே எங்களுக்கு தேவை” என்றார்.