×

"நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க வேண்டும்" - பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

 

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க வரும் நவம்பர் 28ஆம் தேதி (ஞாயிறு) அன்று மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருக்கிறார்.

முன்னதாக விவசாயிகளின் ஓராண்டு கால போராட்டத்தின் வெற்றியாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது. விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி, போராட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் நடைபெறவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் அந்தச் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை செயல்பட வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டியும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளனர்.

இதனால் முதல் நாளிலேயே சட்டங்களை ரத்துசெய்ய வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு எழுந்துள்ளது. இதனை எதிர்க்கட்சி எம்பிக்களும் வலியுறுத்துவார்கள். புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் மிகத்தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடும் அமளியில் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. ஆகவே அதுபோன்ற ஒரு நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.