“கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது”- பிரதமர் மோடி
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் சுதந்திர தின விழாவில் 13வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு குரல் கொடுப்போம் என்ற உணர்வோடு மக்கள் இணைந்து செயல்படுகிறார்கள். நாம் பிற நாடுகளைச் சார்ந்திருக்க முடியாது. நாம் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் இப்போது உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் சுதேசிப் பொருட்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். சுயசார்பு அடையும் முயற்சியாக இந்தியா செமிகண்டக்டர் ஆலைகளை அமைத்துள்ளது. அதன் உற்பத்தியும் ஏற்கனவே தொடங்கிவிட்டது.கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தி 4 மடங்கு அதிகரித்துள்ளது.மின்னணுப் பொருட்களின் தயாரிப்பு 7 மடங்கு அதிகரித்துள்ளது.நவீன இரயில் பெட்டிகளின் உற்பத்தி 21 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் 100 மடங்கு அதிகரித்துள்ளன.
வந்தே மாதரம் பாடலில் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடிவருகிறோம். நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கியுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது” என்றார்.