×

அதிகரிக்கும் கொரோனா - மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!!

 

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி  வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா  பாதிப்பு என்பது கிட்டத்தட்ட இரண்டு லட்சத்தை நெருங்கி விட்டது. இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு , 50 சதவீத பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ஒமிக்ரான்  பரவலும் ஒரு பக்கம் வேகமெடுக்க ஆரம்பித்து விட்டது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்கிறார்.  தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் இருந்தே முடுக்கி விடுமாறும், 15 முதல் 18 வயதில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதிலும்,  60 வயதிற்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள், முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை  துரிதப்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்துவார் என்று தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி ,தமிழகம், கர்நாடகா, உத்திரபிரதேசம் ,கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்க அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.