×

ஆர்மி உடை... வீரர்களுக்கு இனிப்பு - எல்லையில் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி!

 

ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவது வழக்கம். 2014ஆம் ஆண்டு அவர் பிரதமராக பதவியேற்றுக் கொண்டதிலிருந்து இந்த முறையைப் பின்பற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு எல்லைகளுக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடுவார். அந்த வகையில் இந்தாண்டு ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்திலுள்ள நவ்ஷோரி செக்டாப்  ராணுவ முகாமிற்கு பிரதமர் மோடி சென்றார். முகாமிற்கு வருகை தந்த பிரதமரை ராணுவ தளபதி எம்எம் நரவானே உற்சாகமாக வரவேற்றார். 

அதன்பின் முகாமை சுற்றிக்காட்டி, பாதுகாப்பு சூழல் குறித்து பிரதமருக்கு நரவானே எடுத்துரைத்தார். நவ்ஷேரா முகாமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களுடன் தீபாவளியை திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். வீரர்களும் அவருடன் உரையாடி மகிழ்ந்தனர். பிரதமரும் வீரர்களும் தீபாவளி வாழ்த்துகளைப் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது வீரர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், "நமது ராணுவ வீரர்கள் இந்திய பாரதத்தைக் காக்கும் வீர கவசமாக திகழ்கின்றனர். உங்களால் தான் நாட்டில் மக்கள் அமைதியுடன் உறங்குகிறார்கள். பண்டிகைக் காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தீர்க்கிறார்கள். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில் நீங்கள் ஆற்றிய வீரதீர செயல்களை நாடு எப்போதும் நினைவில் கொண்டிருக்கும். நீங்கள் பின்வாங்காமல் வீரத்துடன் போரிட்டு வெற்றிவாகை சூடினீர்கள். நம்முடைய பதிலடி தாக்குதலுக்குப் பிறகும் நாட்டின் அமைதியைக் குலைக்க சதிகள் அரங்கேறின. ஆனால் நீங்கள் அதனையும் முறியடிதீர்கள்” என உற்சாகம் பொங்க பேசினார்.