×

நாடாளுமன்ற தாக்குதலுக்கான காரணத்தை விரைவில் கண்டுபிடிப்பார்கள் - பிரதமர் மோடி

 

நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த புதன் கிழமை பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் பட்டாசுகளை வீசியது தெரியவந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பான விசாரணை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் உ.பா.சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு விதிமீறல் என்பது தீவிரமான பிரச்னை. இதனை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதால், தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்கிறது. அதிகாரிகள் ஆழமான விசாரணையை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணத்தை விரைவில் கண்டுபிடிப்பார்கள். இவ்வாறு கூறினார்.