×

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

 

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சித்தராமையா கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சித்தராமையாவுக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதேபோல் கர்நாடக மாநில துணை முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பதவியேற்றுக்கொண்டார்.   இதனை தொடர்ந்து அமைச்சர்களாக 8 பேர் பதவியேற்றுக்கொண்டனர். எம்.எல்.ஏக்கள் எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.