☰
×

"டாய்லெட் பூட்டியிருக்கு, திறக்க முடியாது!"- சாதாரணமாக சொன்ன இந்த பதிலின் விலை ரூ. 1.65 லட்சம்!

 

கேரள மாநிலத்தில் பெட்ரோல் நிரப்ப வந்த பெண்ணுக்கு கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி மறுத்த பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ.1.65 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டம் ஏழம்குளம் பகுதியைச் சேர்ந்த சி.எல். ஜெயகுமாரி என்பவர் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு மே 8-ம் தேதி இரவு காசர்கோட்டில் இருந்து தனது காரில் பத்தனம்திட்டாவுக்கு பயணம் செய்துள்ளார். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் பயணத்தின் இடையே பய்யோலி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்த கழிப்பறையைப் பயன்படுத்த முயன்றபோது, அது பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டபோது, முதலில் கழிப்பறை செயல்படவில்லை என்றும், பின்னர் அதன் சாவியை மேலாளர் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த ஜெயகுமாரி, உடனடியாக பய்யோலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த கழிப்பறையை வலுக்கட்டாயமாகத் திறந்து கொடுத்தனர். இதையடுத்து, தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு பத்தனம்திட்டா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகினார். இந்தப் புகாரை விசாரித்த ஆணையத்தின் தலைவர் பேபிச்சன் வெச்சூச்சிறா மற்றும் உறுப்பினர் நௌஷாத் தங்கச்சன் ஆகியோர், பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், பெண்ணுக்கு கழிப்பறை பயன்படுத்த அனுமதி மறுத்தது தவறு எனத் தீர்ப்பளித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு ரூ.1.65 லட்சம் அபராதம் விதித்தனர். இது சேவைக் குறைபாடு, நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று தீர்ப்பளித்த ஆணையம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 1.50 லட்சம் இழப்பீடும் ரூ. 15,000 வழக்குச் செலவும் வழங்க உத்தரவிட்டது.

பெட்ரோல் பங்குகளில் இந்த வசதிகள் கட்டாயம்:
• டயருக்குக் காற்று
• சுத்தமான குடிநீர்
• சுத்தமான கழிவறை
• முதலுதவிப் பெட்டி
• எரிபொருள் அளவு, தரச் சோதனை வசதி
• புகார் அளிக்க நிறுவனத் தொடர்பு விவரங்கள்

பெட்ரோல் நிரப்பும்போது:
• தொடங்கும் முன் மீட்டர் "0" காட்ட வேண்டும்
• சந்தேகம் இருந்தால், அளவையும் தரத்தையும் சோதித்துக் காட்டச் சொல்லலாம்
• வசதிகள் மறுக்கப்பட்டால், புகார் புத்தகத்தில் பதியலாம் அல்லது நிறுவன ஹெல்ப்லைனில் புகார் அளிக்கலாம்.