#BREAKING மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்
மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
மேகதாது அணை என்பது கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே கட்ட திட்டமிடும் ஒரு சமநிலை நீர்த்தேக்கத் திட்டமாகும். இது பெங்களூரு குடிநீர் தேவைக்காகவும், மின் உற்பத்திக்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக மாநிலம் கனகபுரா அருகில் காவிரி மற்றும் அர்க்காவதி நதிகள் இணையும் பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த அணையின் கொள்ளளவு- சுமார் 67 டிஎம்சி (TMC) நீர் சேமிப்பு மற்றும் 400 மெகாவாட் மின் உற்பத்தி. இதற்காக தோராயமாக ரூ.9,000 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்கு இத்திட்டம் அவசியமானது என்கிறது கர்நாடகா. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர்வரத்து பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்ற மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும் வாதிடுகிறது தமிழக அரசு. இதற்க எதிராகத் தமிழக அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. மேகதாது அணை திட்டம் விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அனுமதியோ, உத்தரவையோ பிறப்பிக்க கூடாது என தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், காவிரி குறுக்கே புதிய திட்டங்கள், மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.