×

கர்நாடகாவில் புது குழப்பம் - முதலமைச்சர் பதவி வழங்க கோரி பரமேஷ்வர் ஆதரவாளர்கள் போராட்டம்

 

கர்நாடகாவில் முதலமைச்சருக்கான போட்டியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் நடந்து வரும் நிலையில்,  முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் ஆதரவாளர்கள் முதலமைச்சர் பதவியை அவருக்கு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அத்துடன் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.   கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர்  டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது.  காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அடுத்த முதல்வர் யார் என்கிற முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.