காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மூன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சர், செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்படும் என காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா.உறுதி அளித்தார்.