×

இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது- ப.சிதம்பரம் 

 

தலைநகர் டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  

இந்த வழக்கை விசாரித்து வந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இட மாற்றத்தில்  மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியது. துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் என்கிற ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள்,  மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அறிவுறுத்தினர். 


இதேபோல், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்ததற்கு எதிராக உத்தவ் தாக்ரே தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், மகாவிகாஸ் கூட்டணி அரசை அன்றைய ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. 

இந்த இரண்டு தீர்ப்புகளும் ஒன்றிய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “மஹாராஷ்டிரா ஆளுநர் செய்தது தவறு, டில்லி துணை ஆளுநர் செய்தது தவறு. மஹாராஷ்டிரா சபாநாயகர் செய்தது தவறு, புதிய கொறடாவை அங்கீகரித்தது தவறு. கட்சி தாவிய சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதியிழப்பு மனுவில் சபாநாயகர் விரைவில் முடிவு எடுக்காதது தவறு. தவறு செய்தவர்கள் வெறும் பொம்மைகள் என்ற சந்தேகம் எழுவதால் பொம்மலாட்டுக்காரர் யார் என்ற கேள்வி எழுகிறது, பொம்மலாட்டுக்காரர் பேச மாட்டார்கள், உச்ச நீதி மன்றத் தீர்ப்பைப் பற்றிக் கருத்துச சொல்லமாட்டார்கள். இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது” என விமர்சித்துள்ளார்.