☰
×

டெல்லியில் எதிர்க்கட்சியினர் நாளை பேரணி! 

 

வாக்கு திருட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தை முன்வைத்து டெல்லியில் எதிர்க்கட்சியினர் நாளை பேரணி நடத்தவுள்ளனர்.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  வாக்காளர் பட்டியல்களின் 'சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின்' (Special Intensive Revision - SIR) போது, நாடு முழுவதிலும் உள்ள சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களின் அனுமதியோ அல்லது ஆலோசனையோ பெறாமல் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்ததாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இவரைப் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் வாக்கு திருட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தை முன்வைத்து டெல்லியில் எதிர்க்கட்சியினர் நாளை பேரணி நடத்தவுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான நாளைய போராட்டத்தை I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் முன்னெடுத்துள்ளனர். நாளை காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் இருந்து தேர்தல் ஆணைய தலைமையகம் வரை பேரணியாக செல்லவுள்ளனர். எதிர்க்கட்சிகளின் பேரணியை அடுத்து டெல்லி நாடாளுமன்ற வளாகம், ஆணைய அலுவலகம் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.