×

"விவசாயிகளை திட்டமிட்டு கொன்ற மகன்... அமைச்சரை டிஸ்மிஸ் பண்ணுங்க" - அதிரும் நாடாளுமன்றம்!

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகளைக் காரை ஏற்றிக் கொன்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த அக்டோபர் 3ஆம் தேதி அரங்கேறிய இந்தச் சம்பவத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நேரடி தொடர்பு உள்ளது. ஏனென்றால் விவசாயிகளின் மீது ஏறிய காரே ஆஷிஷ் மிஸ்ராவினுடையது தான். சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். அதற்குப் பின் பாஜக தொண்டர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் மேலும் 2 விவசாயிகள், பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து கடும் அழுத்தங்களுக்குப் பின் அமைச்சரின் மகன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போதே அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விவசாய அமைப்புகளும் கண்டன குரல்கள் எழுப்பின. ஆனால் மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் உபி காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழு (SIT) சமர்பித்துள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விவசாயிகளை சதித் திட்டமிட்டு வேண்டுமென்றே கொலை செய்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்தச் செய்தி இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி நோட்டீஸ் கொடுத்துள்ளார். அமைச்சர் அஜய் மிஸ்ராவை நீக்கம் செய்யவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அதேபோல மற்ற எதிர்க்கட்சி எம்பிக்களும் அஜய் மிஸ்ராவை உடனடியாக நீக்கம் செய்து உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி பெற்று தர வேண்டும் என கோரியுள்ளனர்.