ரூ.1க்கு ஷூ - கடை வாசலில் குவிந்த வாடிக்கையாளர்களால் போக்குவரத்து நெரிசல், தடியடி
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடை திறப்பு விழாவில் ஒரு ரூபாய்க்கு ஷூ தருவதாக சமூக வலைதளத்தில் கடையின் உரிமையாளர் பதிவிட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் கடையின் முன்பாக குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வைக்கம் பகுதியை சேர்ந்த முகமது பஷீர் என்பவர் இன்றைய தினம் செருப்பு கடை திறக்க உள்ளதாக சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தினார். மேலும் இன்று வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு ரூபாய்க்கு ஒரு ஷூ தருவதாகவும் அதில் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தி உள்ளார். இந்த நிலையில், இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலான நிலையில், கடை திறப்பு விழா நடைபெற உள்ள இருந்த நிலையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான இளைஞர்கள் கடை முன்பாக திரண்டனர். மேலும் நேரம் அதிகரிக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரு ரூபாய்க்கு ஒரு ஷூ வாங்குவதற்கு குவிந்தனர். இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கூட்டத்தை கலைப்பதற்கு முயற்சி செய்த பின் அதனை கலைக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். ஒரு ரூபாய்க்கு ஒரு ஷூ தருவதாக கடையின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து அதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கடையின் முன்பாக குவிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.